நேற்று இரவு பத்துமலை தைப்பூச விழாவுக்கு வருகை தந்த பிரதமர் நஜிப் துன் ரசாக் வருவதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமிதத்தோடு கூறினார். அவர் வருகையை ‘வரலாற்றுப் பூர்வமானது’ என்று தமிழ் நாளேடுகள் வருணித்துள்ளன.
இந்தியர்களின் பிரச்சனைகளைத் தொட்டுப் பேசுவார் என்றும் சில பிரச்சனைகளுக்காவது தீர்வு கூறுவார் என்றும் எதிர்பார்த்திருந்த அறிவாளி இந்தியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற அங்கீகாரம் வழங்கப்படுவது குறித்துக் கடந்த சில மாதங்களாகத் தமிழ் ஆர்வலர் நடத்தி வரும் போராட்டங்களுக்கும் கல்வி அமைச்சிடம் வழங்கப்பட்டிருக்கும் கோரிக்கைக்கும் பிரதமர் பதில் கூறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
அவர்கள் நம்பிக்கையில் மண்ணை வாரிப் போட்ட பிரதமர் பத்துமலைக்குத் தாம் வருகை புரிந்துவிட்டதாலேயே இந்தியர்கள் பிரச்சனைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி விட்டதாகச் சிலர் மட்டும் எண்ணும்படிச் செய்து விட்டுப் போயிருக்கிறார்.
எஸ்.பி.எம். 12 பாடங்கள் மீட்புக் குழுவினர் பிரதமரிடம் கோரிக்கை கொடுப்பதற்குப் பத்துமல நிர்வாகம் தடை விதித்தது. உண்ணாநிலை இருக்கவும் இடம் வழங்க மறுத்துவிட்டது. தமிழுக்காக இதைக் கூடச் செய்யச் சுதந்திரம் இல்லாத நாட்டில் இந்தியர்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டதைப் போல் எண்ணுவது காற்றைத் தின்று பசியாறுவது போலத்தான் என்று மீட்புக் குழுத் தலைவர் ஆ. திருவேங்கடம் கூறினார்.
12 பாட மீட்புத் தொண்டர்கள் 500 பேர்
தடைகள் பல விதிக்கப்பட்டாலும் பத்துமலையில் கூடிய 12 பாட மீட்புக் குழுவின் தொண்டர்கள் 500 பேர் வெள்ளைச் சட்டை அணிந்து நஜிப் பேசிய மேடைக்கு அருகில் நின்றனர்.
எஸ்.பி.எம். 12 பாடங்களை மீட்போம் என்று பளீர் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
இக்குழுவினர் நஜிப் மேடையை நெருங்குவதற்குத் தடையாக 1000 காவல்படையினர் மேடையைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். இவர்களோடு ம.இ.கா. தொண்டர்களும் தடுப்புச் சுவர் அமைத்திருந்தனர். மீட்புக் குழுவினர் எவ்விதக் கலவரமும் செய்யாமல் அமைதியாகச் சென்று மக்களிடம் சுற்றறிக்கைகளை வழங்கினர்.
இன்று மாலை 3.30க்கு மீட்புக் குழுவினர் பால்குடம் ஏந்தி பத்துமலை, முருகனுக்குத் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவர் என்று ஆ. திருவேங்கடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment